கடந்தாண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், 76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, அத்தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், வாக்குக்காக பணம் கொடுத்து ரவீந்திரநாத் குமார் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பணப் பட்டுவாடா அதிகம் நடந்ததாக வேலூர் தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், தேனி தொகுதியில் அதிக பணப்பட்டுவாடா நடந்தும், தேர்தலை தள்ளி வைக்கவில்லை என்று குறிப்பிட்டுருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், தனக்கு எதிரான தேர்தல் வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்பதால், அந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என ரவீந்திரநாத் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வாதங்களை கேட்ட நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ரவீந்திரநாத்தின் மனு மீதான தீர்ப்பை, அக்டோபர் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: சுமுக முடிவை எட்ட அமைச்சர்கள் தீவிர முயற்சி