சென்னை: நீலகிரி மாவட்டம், கூடலூர், தேவன் தனியார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த, சந்திரன்(51) என்பவரை 24ஆம் தேதி தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரைப் புலியை பிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது உள்பட அதை வேட்டையாடுவதற்கான உத்தரவை முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் பிறப்பித்துள்ளார்.
இதனை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா டோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை வனத்துறை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது, நீதிபதிகள் இந்த வழக்கை நாளை (அக். 5) விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 9ஆவது நாளாக 'T23' புலியை பிடிக்கும் பணி தீவிரம்!