சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது தமிழினத்திற்கு பெருமை என சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர்தம் அறிக்கையில், "தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்ப விளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறிய செய்யும் நோக்கத்திலும், ஒன்றிய அரசின் "கேலோ இந்தியா" திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப் பட்டியலில், சிலம்பத்தை சேர்த்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி கோரப்பட்டது.
![centre recognizes tamilnadu silambam game](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/stalin_1409newsroom_1631593488_764.jpg)
அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை ஒன்றிய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து "புதிய கேலோ இந்தியா" திட்டத்தின் கீழான "விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கி ஊக்குவித்தல்" (Promotion of inclusiveness through Sports) என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினை சேர்த்துள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியை கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மை பாதுகாத்துகொள்ளுதல் என பல கூறுகளை கொண்ட விரிவான தற்காப்பு கலை ஆகும். தற்போது ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்றுவருகின்றனர்.
![centre recognizes tamilnadu silambam game](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-meyyanathanminister-7209106_20072021135626_2007f_1626769586_695.jpeg)
தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும், கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாது இடம் பெற்றுவருகிறது. ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்து சிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய விளையாட்டு ஆணையத்தையும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.