சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மத்திய மருந்து சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசால் அனுப்பப்படும் தடுப்பூசிகள், மருந்துகள் ஆகியன இங்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு, பின்னர் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதேபோல், கரோனா வைரஸ் தடுப்பூசிகளையும் இங்கு சேமித்து வைத்து, பிற மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனை இன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர் உமாநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கரோனா வைரஸ் தடுப்பூசிகளை 2 டிகிரி செல்சியஸ் அளவு கொண்ட குளிர்பதன அறையில்தான் வைக்க வேண்டும். அதற்கேற்றாற்போல் மத்திய அரசின் சேமிப்புக் கிடங்கில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ஊசிகளை போடுவதற்கும், எடுத்துச் செல்வதற்குமான குளிர்சாதன பெட்டிகளும், கிடங்குக்கு வந்து சேர்ந்துள்ளன.
5 மில்லி அளவில் மருந்து எடுக்கும், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் ஊசிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த ஊசிகள் ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இக்கிடங்கில் மட்டும் 2 கோடி தடுப்பூசிகளை சேமித்து வைக்க முடியும். மேலும், சூழல் கருதி கூடுதலான அளவு சேமித்து வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்டமாக தொடங்கப்பட்ட கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்வை, அரசு ராஜிவ்காந்தி பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை ஆகிய இடங்களில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நேரில் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு- ஹர்ஷ் வர்தன்