சென்னை: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம், ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாக செயல்படும் கிராம, வட்டார மற்றும் மாவட்ட ஊராட்சிகளைத் தேர்வு செய்து, விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
* மூன்றடுக்கு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது, திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.
* சிறந்த ஊராட்சி ஒன்றியத்துக்கான விருது, திருச்சி மாவட்டத்தின் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், ராமநாதபுரம் மாவட்டத்தின் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக்கு வழங்கப்பட்டது.
* சிறந்த கிராம ஊராட்சிக்கான விருது - திண்டுக்கல் மாவட்டத்தின் அக்கரைப்பட்டி கிராம ஊராட்சிக்கும், கரூர் மாவட்டத்தின் மண்மங்கலம் கிராம ஊராட்சிக்கும், மதுரை மாவட்டத்தின் சின்னப்பட்டி கிராம ஊராட்சிக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தின் அத்திக்காட்டுவிளை கிராம ஊராட்சிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கங்கலேரி கிராம ஊராட்சிக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தின் கட்டாத்தி கிராம ஊராட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
* சிறந்த கிராம சபைக்கான தேசிய விருது, ராமநாதபுரம் மாவட்டத்தின் சாத்தனூர் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.
* கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்திற்கான (VPDP)தேசிய விருது, சிவகங்கை மாவட்டத்தின் துவார் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.
* குழந்தைகள் நேய கிராம ஊராட்சிகான விருது, நீலகிரி மாவட்டத்தின் குஞ்சப்பனை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய விருது பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள், தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விருதுகளை காட்டி வாழ்த்து பெற்றனர். அவர்களை பாராட்டிய முதலமைச்சர் மேன்மேலும் இதுபோன்ற விருதுகளை பெற வேண்டும் எனக்கூறி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.