தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதனால் பலர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். அந்தவகையில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் மத்திய சென்னை வேட்பாளருமான தயாநிதி மாறன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவைத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். ஏனென்றால் கடந்த ஐந்து ஆண்டு காலம் தமிழகம் முற்றிலுமாய் புறக்கணிக்கப்பட்டது. மோடி தலைமையில் மத்திய அரசு தமிழகத்தில் பாரபட்சம் காட்டியது. தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல திட்டமும் வரவில்லை. கஜா புயல் பாதிப்பை மோடி பார்வையிடவில்லை. ஆனால் தேர்தல் வந்தவுடன் வாரா வாரம் தமிழகம் வருகிறார். புது புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் மெட்ரோ போன்ற பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. சாலை நெரிசல் குறைக்க எந்த ஒரு திட்டமும் இந்த அரசு கொண்டுவரவில்லை. இன்று படித்த இளைஞர்கள் ஸ்விகி (Swiggy)இல் சாப்பாடு டெலிவரி செய்து வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இதற்கு மதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும்.
மோடி காவலர்தான். ஆனால் நீரவ் மோடி, அதானி போன்றவர்களுக்குதான் அவர் காவலர். மக்களுக்கு அல்ல. அதிமுக கூட்டணி பாஜகவின் அடிமை கூட்டணி. டயர் நக்கி, எடுப்புடி என்று மூன்றாண்டு காலம் விமர்சித்தவர்கள் இன்று யாருக்கு எடுபுடியாகவும், டயர் நக்கி கொண்டும் இருக்கிறார்கள்” என்றார்.