மயிலாப்பூர் மாங்கொல்லையில் கடந்த ஆண்டு அக்டோடர் மாதம் 28ஆம் தேதி ’மே17 இயக்கம்’ சார்பில் காவல் துறை அனுமதியுடன் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அக்கூட்டத்தில் குறிப்பிட்ட பிரிவினருக்கும் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்தும் விதமாகவும், வேத இதிகாசங்கள் குறித்து மிகவும் அவதூறாக கருத்துக்களைப் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவதூறு பேசியதாக மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்க நிர்வாகிகள் அருள் முருகன், லினோ குமார், பிரவீன் குமார் ஆகியோர் மீது வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.