மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கேற்ப, அதனை அரசுடமையாக்கி கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது. இதற்காக ஜெயலலிதாவின் வருமான மற்றும் சொத்து வரி நிலுவைத்தொகை உள்பட 69 கோடி ரூபாயை வைப்புத் தொகையாக சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு செலுத்தியது.
இந்நிலையில், இந்தத் தொகையில் இருந்து ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி 36.9 கோடி ரூபாயை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதிக்கக் கோரி, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில், ஏற்கனவே ஜெயலலிதாவிற்காக 50.80 கோடி ரூபாய் செலவில் அரசு நினைவிடம் கட்டி வரும் நிலையில், கரோனா காலக்கட்டத்தில் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழ்நாடு அரசு, மக்கள் வரிப்பணத்தை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்காக செலவிடுவது தவறு எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று (செப்டம்பர் 8) விசாரணைக்கு வந்தபோது, வேதா இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து தீபா, தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கோடு, இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்கக் கோரி, அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் முறையிட மனுதாரருக்கு அறிவுறுத்தி, விசாரணையை தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: அரியர் ஆல்-பாஸ் பண்ணவச்சதுக்கு நன்றி ஐயா!