விருகம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆகஸ்ட் 23 அன்று, சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஒன்பது பேரை 18 கிலோ கஞ்சாவுடன் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ஆந்திராவை சேர்ந்த ஐசக் என்பவர் கஞ்சா சப்ளை செய்ததும், இதற்கு இடைத்தரகராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹரிபாபு என்பவர் செயல்பட்டதும் தெரியவந்தது.
குறிப்பாக, குடும்ப வறுமையில் உள்ள மாணவர்களிடம் எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது. இதனிடையே, கஞ்சா கும்பல் தலைவன் ஐசக்கை தனிப்படை காவல்துறையினர் விஜயவாடாவில் வைத்து கைது செய்தனர்.
இவரிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களில் ஒருவரான பிரித்திவிராஜை பாண்டிச்சேரியில் நடைபெற்ற பார்டியில் தான் சந்தித்தகாகவும், போதையில் இருந்த பிரித்விராஜின் சக நண்பர்களை மூளைச்சலவை செய்து கோயம்பேடு காய்கறி வண்டிகளை பயன்படுத்தி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
கஞ்சாவின் உச்சம், வருமானவரித்துறை சோதனையின் இடைஞ்சல் - பாக்யராஜ் கலகல பேச்சு
இந்த வழக்கில் கைதான ஹரிபாபு கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்யும் தனது உறவினர்களை கஞ்சா கடத்துவதற்காக பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் வாட்ஸப் குழு அமைத்து கஞ்சா தேவைப்படும் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கிராம் 100 ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்துள்ளனர். இதில் 1 கிலோ கஞ்சா விற்பனை செய்தால் கல்லூரி மாணவர்களுக்கு ஐசக், 8 ஆயிரம் ரூபாய் கமிஷன் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து கைதான ஐசக்கை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 18 கிலோ கஞ்சா, இரண்டு இருசக்கர வாகனம், 9 செல்போன்கள், 6ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்திய சந்தையும் கஞ்சாவின் சர்வதேச வணிகமும்