சென்னை: 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு முன்பாக நடிகர் செந்தில் தன்னை ஒருமையில் அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் திருச்சி மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார்.
அதில் டிடிவி தினகரனின் தூண்டுதலின் பேரில் தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியதால் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். இதனையடுத்து தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது திருச்சி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி டிடிவி தினகரன் மற்றும் செந்தில் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாறுதல்கள் குறித்து ஆலோசனை வழங்க நீதிமன்றம் உத்தரவு