தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராம சபை கூட்டத்தை ஆண்டுக்கு நான்கு முறை ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்பட வேண்டும். ஆனால், கரோனா ஊரடங்கு விதிகளால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி மற்றும் அக்டோபர் 2ஆம் தேதி நடத்த வேண்டிய கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
இதை எதிர்த்தும், கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தரவிடக்கோரியும் திமுக தரப்பில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியாவும் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால், கரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் கிராம சபை கூட்டங்களை நடத்துவது சரியாக இருக்காது எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, கே.என்.நேரு, ஏ.ஜி.மவுரியா தொடர்ந்த வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நேயாவை பாதுகாத்து வையுங்கள் - அவர் பேரன்பின் அடையாளம்