சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு, நீர்வரத்து இல்லாததால் பொதுப்பணித் துறை அலுவலர்கள் கண்டலேறு-பூண்டி கால்வாயில் அடுத்த வாரத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பே பூண்டி ஏரிக்கு நதிநீர் வந்துகொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்பு கனமழை பெய்ததால் பூண்டி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது.
பிறகு பொதுப்பணித் துறை அலுவலர்கள் அணையிலிருந்து உபரி நீரை கொசஸ்தலை ஆற்றுக்குத் திறந்துவிட்டனர். தற்போதைய நிலவரப்படி 140 அடி கொண்ட பூண்டி ஏரியில் நீர்மட்டம் 138.22 அடியாக உள்ளது.
இது குறித்து உதவி செயற்பொறியாளர் கூறுகையில், "நீர்வரத்து இல்லாததால் கண்டலேறு-பூண்டி கால்வாயில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். கனமழை, கிருஷ்ணா நதி நீர் கடந்தாண்டு இறுதிவரை நீர்வரத்து தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.
எனவே, கால்வாயின் பெரும்பாலான பகுதிகளில் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக எந்தெந்தப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆய்வுசெய்து எங்களது துறைக்கு அனுப்பியுள்ளோம்" எனக் கூறினார்.
இதேபோல, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் வரத்து கால்வாய்களிலும், இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்த அவர், மெட்ரோ ஏரிகள் அனைத்தும் பொதுப்பணித் துறையால் கண்காணிக்கப்பட்டுவருவதாகக் கூறினார்.
இதனிடையே அனைத்து மெட்ரோ ஏரிகளிலும் நீர்மட்டம் அதிகமாக உள்ளதால் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம், நாள்தோறும் 1000 மில்லியன் லிட்டர் குடிநீரை விநியோகம் செய்துவருவதாகவும், இது கோடை காலத்திலும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கு முன்பு வெறும் 630 மில்லியன் லிட்டர் குடிநீரை விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தேர்தல் கூட்டம் நடத்த 136 இடங்களை ஒதுக்கிய மாநகராட்சி