சென்னை:கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல இடங்களில் ஆம்புலன்ஸ் வசதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து சேவையை விரிவுபடுத்துவது, ஓய்வூதிய பணப் பலன்களை அளிப்பது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மற்ற மாநிலங்களைப் போல், தமிழ்நாட்டிலும் பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸாக மாற்றப்படுமா பேருந்துகள்?
சில மாநிலங்களில் பேருந்துகளில் இருக்கைகளை கழற்றிவிட்டு, நீளமான படுக்கைகளுடன் ஆக்சிஜன் வைப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்தி தற்காலிக ஆம்புலன்ஸாக பேருந்துகளை மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அலுவலர்களுடனான கூட்டத்திற்குப் பின்பு, இதுபோன்ற திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுமா என அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், மாநிலத்திற்கு தேவை ஏற்பட்டால் அதனை நிறைவேற்ற போக்குவரத்துத்துறை தயாராக இருப்பதாகவும்; அவர் பதில் அளித்தார்.
அத்தியாவசியப் பணியாளர்களுக்குக் கூடுதல் பேருந்துகள்?
மருத்துவப் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், அத்தியாவசிய அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பணியாளர்களுக்காக தற்போது 200 மாநகரப் பேருந்துகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த சேவையை விரிவுபடுத்தி கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அத்தியாவசியப் பணியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
குறிப்பாக காலை நேரத்தில் அதிகப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அமைச்சரிடம் கேட்டபோது தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதிலளித்தார்.