சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், பெருநகர குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் மூலம் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. கட்டடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியிருப்பதால், காலதாமதம் ஏற்படுவதோடு, அதிகளவில் அலைச்சல் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனால், அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றைச்சாளர முறையில் வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி ஒற்றைச்சாளர முறையில், அதுவும் தானியங்கி முறையிலேயே கட்டட அனுமதியை பெறும் முறை, மே 1ஆம் தேதி முதல் அமலாகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதில், முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், அடுத்த கட்டமாக பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் ஒற்றைச்சாளர திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும், மே 1ஆம் தேதி முதல் கட்டடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தால் போதும், நேரில் வர தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் பதிவு செய்திருந்தால் தானியங்கி முறையிலேயே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.