சர்வதேச காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சத்தால் முதலீட்டாளர்கள் பணத்தை பங்குச் சந்தையில் இருந்து எடுத்து அரசின் கடன் பத்திரங்கள், தங்கம் போன்ற பாதுகாப்பானவற்றில் முதலீடு செய்வதால்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் தங்க நகை வாங்குவது சரிவைச் சந்தித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது. அதன்பின் சற்று தணிந்திருந்தாலும், 2019 டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை கடுமையான உயர்வைக் கண்டது. குறிப்பாக ஈரான் அமெரிக்கா இடையயான போர் பதற்றம் அதிகரித்ததால் தங்கத்தின் விலை கடுமையான உயர்வைச் சந்தித்தது.
பட்ஜெட் 2020-21: விவசாயிகளுக்கு என்ன செய்ய வேண்டும்? பொருளாதார நிபுணர் யோசனை!
தங்க விற்பனைச் சரிவு
இதற்கிடையே தங்க நகை நுகர்வு குறைந்து வருவதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தங்க நகை நுகர்வு 16 விழுக்காடு குறைந்துள்ளதாகவும், இது கிட்டதட்ட 10 ஆண்டுகளில் இல்லாத அளவுச் சரிவு என்றும் அந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்றைய நிலையில் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 3,828 ரூபாயாக உள்ளது.
தங்கம் சவரன் 30 ஆயிரத்து 624 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கத்தின் விலை 15 விழுக்காடு அதிகம் என வியாபாரிகள் கூறுகின்றனர். இதனைக் குறைத்தால் தங்கத்தின் விலை கிராமுக்கு 5000 ரூபாய் வரை குறையும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய இந்திய தங்கம் மற்றும் நகை விபாயாரிகள் சங்க மாநில துணைத் தலைவர் சாந்தக்குமார், "பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கத்தின் விலை 15 விழுக்காடு அதிகமாக உள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டால் தற்போது சவரன் 31,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் இருந்து குறைந்து 27 ஆயிரம் ரூபாய் என்ற அளவுக்கு வரும். இதன் பலன்கள் வியாபாரிகளுக்கு கிடைக்கப்போவதில்லை, பொதுமக்களுக்குதான் சென்று சேரும். இதன்மூலம் விற்பனை அதிகரிக்கும்" என்று கூறுகிறார்.
டிக்டாக் செயலியை ஓரங்கட்டுமா ஃபேஸ்புக்கின் லஸ்ஸோ!
2020 தங்கம் விற்பனை எப்படி இருக்கும்?
குறைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தங்க விலை ஏற்ற, இறக்கம் காரணமாக 2020ஆம் ஆண்டில் தங்கத்தின் தேவை குறையும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. தங்கத்தின் இறக்குமதி வரி அதிகளவில் இருப்பது; இந்தப் பிரச்னையை மேலும் அதிகரிக்கும் என, அந்த அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் தங்கத்தின் மீது 12.5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இதனை 4 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் எனத் தங்க நகை வியாபாரிகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
அது இல்லாவிட்டால் தங்க நகை இறக்குமதியை நம்பியிருக்கும் வியாபாரிகள், தொழிலாளிகள் பாதிக்கப்படுவர் என்றும், இதனால் வருங்காலங்களில் வேலை இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாட்டில் ஒரு கோடி பேர் தங்க வியாபாரத்தை நம்பியுள்ளனர், தமிழ்நாட்டில் சுமார் 10 லட்சம் பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும் என சாந்தக்குமார் கூறுகிறார். இந்திய அரசுக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியில், இறக்குமதி வரி குறைக்கப்படுவது சந்தேகமே எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.