சென்னை, திருவொற்றியூர், பூங்காவணபுரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பிரபு தாஸ். இவரது மகன் பிரவீன் குமார் (14). இவர் திருவொற்றியூர் காலடிப்பேட்டை சந்தைப்பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று (ஏப்.15) மாலை பிரவீன் குமார், அவரது நண்பர்கள் திமோத்தேயு, புவனேஷ் குமார் ஆகிய மூன்று பேரும் திருவொற்றியூர், திருச்சிணாங்குப்பம் அருகே கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
ராட்சத அலையில் சிக்கிய மாணவன்
அப்போது, கடலில் தோன்றிய ராட்சத அலை பள்ளி மாணவன் பிரவீன் குமாரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனைப் பார்த்த திமோத்தேயும், புவனேஷ்குமாரும் வெளியே ஓடிவந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்த மீனவர்கள் விரைந்து சென்று கடலுக்குள் குதித்து தேடினர். ஆனால், எங்கு தேடியும் பிரவீன் குமார் கிடைக்கவில்லை. தகவலறிந்து தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து, கடலுக்குள் காணாமல் போன மாணவனைத் தேடிவந்தனர்.
கடலில் மிதந்துவந்த உடல்
இந்நிலையில், இன்று (ஏப். 16) காலை 10 மணியளவில் அதே இடத்தில் மாணவன் பிரவீன் குமாரின் உடல் மிதந்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் சிறுவனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து திருவொற்றியூர் காவல் துறை வழக்குப் பதிவு செய்து, மாணவன் உடலைக் கைப்பற்றி உடர்கூராய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.
இதையும் படிங்க: 'சென்னையில் நாளொன்றுக்கு 15 காவலர்கள்வரை கரோனா பாதிப்பு - காவல் துறை ஆணையர்'