தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தடையை மீறி எதிர்பாராதவிதமாக அதிரடியாக தனது 'வெற்றிவேல் யாத்திரை'யைத் தொடங்கியுள்ளார். முன்னதாக கடவுள் முருகனின் அறுபடை வீட்டிற்கும் திருத்தணியிலிருந்து திருச்செந்தூர் வரை, 'வேல் யாத்திரை' செல்ல தமிழ்நாடு பாஜக சார்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த யாத்திரையானது நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 6ஆம் தேதி முடியும் என அறிவிப்பு வெளியானது.
ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக, வேல் யாத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தகவலளித்த தமிழ்நாடு அரசு, 'கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது' எனத் தெரிவித்தது.
இந்த அறிவிப்பு, அதிமுக கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு அதிருப்தியளித்தது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரும் வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என உறுதிபட தெரிவித்தார்.
இந்நிலையில், அரசு உத்தரவைமீறி தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் கையில் வேலை எடுத்துக்கொண்டு, அவரது வீட்டிலிருந்து கடவுள் முருகனை தரிசனம் செய்ய செல்வதாகக்கூறி பெரும்திரள் கொண்ட பாஜக தொண்டர்களுடன் தற்போது திருத்தணிக்குச் சென்றடைந்தார்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: வேல் யாத்திரை - திருத்தணி புறப்பட்டார் முருகன்!