சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய செய்தியாளர்களிடம் பேசுகையில், “காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகளில் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் பாடம் கற்றுத் தருவார்கள். தமிழ்நாட்டில், இப்போது சூழ்நிலை மாறியுள்ளது. மக்கள், இளைஞர்கள், படித்தவர்களிடம் தேச பக்தி உணர்வு வந்திருக்கிறது. அதனால் திமுக, தனிப்பட்ட நாடு உருவாக்கப் பேசுவது, விடுதலைப்புலிகளை ஆதரிப்பது போன்ற காலம் மாறிவிட்டது.
அமெரிக்காவும் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்; இதில் தலையிட வெளிநாட்டிற்கு அதிகாரம் கிடையாது என்று சொல்லிவிட்டது. காஷ்மீர் மக்களும் ஆதரவு தந்து வெளியே வந்துவிட்டனர். பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். இது பாஜக-வுக்கும் மோடிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
காங்கிரஸ் எம்.பிக்கள், தலைவர்கள் நிறையப் பேர் ஆதரவு தந்துள்ளனர். மக்கள் ஆதரவு தரும்போது, இதுபோல்தான் நடக்கும். காங்கிரஸ் கட்சிக்கு இத்தாலியிலிருந்து வந்த தலைமை 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தபோது அட்டகாசம் செய்தார்கள். இனிமேல் அவர்களால் அது முடியாது. ராமர் கோயில் வேண்டும் என்று 82% இந்துக்கள் கூறுகின்றனர்.
திமுகவின் பேச்சிற்கு யாரும் மதிப்பு தர மாட்டார்கள். அரசியலில் மம்தா பானர்ஜிக்குத் தனிப்பட்ட இடம் உள்ளது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையைத் திறக்க அழைத்து இருப்பார்கள். அவர் வந்திருப்பார். அவ்வளவுதான். இறந்துவிட்டவரைப் பற்றி தவறாகச் சொல்லமாட்டேன்” என்றார்.