சென்னை: அடையாறு பகுதியிலுள்ள தர்மா பார்மஸியில் மேலாளராக இருந்து வருபவர் முகமது நூருதீன் (61). இவரது நண்பர் மூலமாக ராஜா அண்ணாமலைபுரம் போட் கிளப் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி நாகராஜ் (31) என்பவருடன் முகமதுக்கு பழக்கம் ஏற்பட்டது.
ரூ. 92 லட்சம் மோசடி
நாளடைவில் தனக்கு பாஜக தலைவர்களுடன் நெருங்கிய நட்பு இருப்பதாகக்கூறி தொழில் பெருக்கத்திற்காக வங்கியிலிருந்து ரூ. 75 கோடி பணம் லோன் வாங்கித் தருவதாக முகமதுவிடம் நாகராஜ் கூறியுள்ளார். ஆனால் அதற்கு பணம் செலவாகும் எனக்கூறி பத்திரப்பதிவிற்கு ரூ. 6.5 லட்சமும், ரூ.60 லட்சம் ஸ்டாம்ப் பேப்பர், ரூ.22 லட்சத்தில் டைமண்ட் நகைகள் என மொத்தம் ரூ. 92 லட்ச தொகையை முகமதுவிடம் நாகராஜ் பெற்றுள்ளார்.
இதனையடுத்து நீண்ட நாள்களாக லோன் வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தை திருப்பித் தராமலும் நாகராஜ் ஏமாற்றி வந்ததால், முகமது அவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது செக் ஒன்றை வழங்கினார்.
4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
அந்த செக்கை வங்கியில் செலுத்தினால் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணமில்லை எனத் தெரியவந்ததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது 2019ஆம் ஆண்டு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் நாகராஜ் மீது புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ், அவரது தந்தை விஷ்னு சாகர் (73), சகோதரி பூர்ணிமா ஆகியோர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாகராஜை நேற்று முன்தினம் (ஜூலை 25) காவலர்கள் கைதுசெய்தனர்.
விசாரணையில்..
இவரிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில்
- 2016ஆம் ஆண்டு பாஜக சார்பில் ராணிப்பேட்டை தொகுதியின் சட்டப்பேரவை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தது தெரியவந்தது.
நாகராஜ் ஏற்கெனவே முன்னாள் ஆளுநர் ரோசய்யாவின் பேரன் எனக்கூறி,
- தொழிலதிபர் பெவினா என்பவரிடம் ஈசிஆர் பகுதியில் குறைந்த விலையில் பங்களா வாங்கித் தருவதாகக்கூறி ஒரு கோடிக்கும் அதிகமாக மோசடி செய்தவழக்கில் 2017ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவலர்களால் கைதுசெய்யப்பட்டார்.
இதேபோல் தான் பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக்கூறி முகமதுவிடமும் ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் நாகராஜின் தந்தை, சகோதரி ஆகியோரை காவலர்கள் தீவிரமாக தேடிவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட நாகராஜ் இதேபோல் வேறு நபர்களிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பெகாசஸ் வாடிக்கையாளர் யார்- ப.சி. கிடுக்கிப்பிடி!'