சென்னையில் தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கரக் கைவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கரக் கைவண்டிகளை வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி வளர்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். பாஜக சார்பாக ஏற்றப்பட்ட கொடிக் கம்பங்களை காவல் துறையினர் அகற்றியுள்ளனர். தமிழ்நாட்டில் அதிமுக, திமுக கொடிக்கம்பங்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், பாஜக கொடி ஏற்றினால் மட்டும் அவர்கள் மீது வழக்குகள் பதியப்படுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது.
பாஜகவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் சிலர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளால் பாஜக தொண்டர்கள் துவண்டு விட மாட்டார்கள். இதை எங்கள் வளர்ச்சியை ஊக்கப்படுத்தக் கூடிய ஒன்றாக தான் நான் கருதுகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டணி மீண்டும் அதிக இடங்களைக் கைப்பற்றி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். தனித்து போட்டியிட்டாலும் 60 இடங்களை தமிழ்நாட்டில் கைப்பற்றும் வகையில் பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்துள்ளது.
திமுக, நடிகர் சூர்யா அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 2013ஆம் ஆண்டு திமுக, காங்கிரஸ் கூட்டணியில் தான் இந்தியாவில் முதன்முதலில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அவர்கள் நீட் தேர்வைக் கொண்டு வந்தபோது ஆங்கிலம், இந்தியில் மட்டுமே எழுத முடிகின்ற வகையில் தேர்வு இருந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு எழுத வழி செய்யப்பட்டது.
திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மாணவர்கள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்று கங்கனம் கட்டி வேலை செய்து கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணிக் கட்சிகள் நீட்டுக்கு எதிராகப் போராடுவது, தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்காகதான். ஏழை மாணவர்களின் நலனுக்காக அல்ல” என்றார்.