சென்னை: சட்டப்பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பிய நிலையில், அது குறித்து விவாதிக்க கடந்த ஐந்தாம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பிப்ரவரி எட்டாம் தேதி சட்டசபை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (பிப். 8) சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பாஜக வெளிநடப்பு
இந்தக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேரவையில் தாக்கல் செய்தார். ஒரு மனதாக நிறைவேற்றச் சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து பேசத் தொடங்கிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நீட்டை வைத்து திமுக அரசியல் செய்கிறது எனக் கூறி பாஜக வெளிநடப்பு செய்வதாகச் சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்தார்.
பின்னர், செய்தியாளரிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ”நீட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசால் இரண்டாம் முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இருக்கும்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு, ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அத்தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
அரசியல் லாபம்
நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தை இன்று (பிப். 8) மீண்டும் சட்டப் பேரவையில் திமுக அரசு கொண்டுவந்துள்ளது. இது தேவையானதா? நீட் தேர்வால் சமூக நீதிக்கு பாதுகாப்பு இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இன்று நீட் தேர்வு மூலமாக அனைத்து சமூகத்திற்கும் சமூகநீதி காக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு, அரசியல் லாபத்திற்காக இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது. இது ஏற்புடையது அல்ல. எனவே, பாஜக இதனை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளித்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் மாணவர்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். அரசியல் கண்துடைப்புக்காகவே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கும் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை.
ஏ.கே. ராஜன் குழு அறிவிக்கப்பட்டபோதே நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களை அவர் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவரின் அறிக்கை எவ்வாறு நியாயமாக இருக்க முடியும்; ஒருதலைபட்சமாகவே அவரது அறிக்கை அமைந்திருக்கிறது என எங்களுக்கு சந்தேகம் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மசோதா குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறுகையில், “ ஆளுநருக்கு நீட் விலக்கு தொடர்பான தீர்மானத்தை திருப்பி அனுப்ப முழு அதிகாரம் உள்ளது. இங்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்பவர்களுக்கு அதிகாரம் இல்லை.
சட்ட மசோதா ஆளுநருக்கு அவையில் பரிசீலிக்கும் அதிகாரம் இருக்கும் என்பதை மறந்து விட கூடாது. சட்டசபையில் சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியபோது, நீதிமன்றத்திற்கு மட்டுமே செல்ல வேண்டும். ஆளுநர் சரியாகவே முடிவெடுத்திருக்கிறார்." என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம் நேரலை