காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினரிடையே உரையாற்றிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, “காங்கிரஸ் கூட்டணியில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பெட்ரோல் விலையை உயர்த்தினால் ஆட்சிக்கு வரமுடியாது என்றோம். ஆனாலும் கடைசியாக உயர்த்தினார்கள். அடுத்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோற்றது. தற்போது மத்திய மாநில அரசுகள், தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை ஏற்றி வருகின்றன. கண்டிப்பாக பாஜக இனி ஆட்சிக்கு வரமுடியாது.
மாநில அரசை சொல்ல வேண்டியதில்லை. அதிமுக இனி ஆட்சிக்கே வரப்போவதில்லை. கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விற்பனையை ஜி.எஸ்.டி.வரி விதிப்புக்குள் கொண்டுவர வேண்டும்” என்றார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, இதயவர்மன், வரலட்சுமி மதுசூதனன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கே.எஸ். அழகிரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் வழக்கு