ஒவ்வொரு ஆண்டும் அரசின் சார்பில், ஜூலை 7ஆம் நாள் (நாளை) இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் விழா சென்னையில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள இரட்டைமலை சீனிவாசன் திருவுருவச்சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படும் அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்யப்படுகிறது.
பொதுமக்களின் நலன் கருதி, கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்கும் நோக்கத்தில், சென்னை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினை கடுமையாக கடைபிடிக்க, பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, வருகின்ற ஜூலை 7ஆம் நாள் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளன்று கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள இரட்டைமலை சீனிவாசனின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் மலர்த்தூவி மரியாதை செலுத்துவார்கள். 144 தடை உத்தரவு காரணமாக இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் எனவும், இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.