கடந்த 45 நாள்களாக ஊரே அடங்கியிருந்ததிலிருந்து இன்றுதான் தேனீர் கடை, வீட்டு உபயோகப் பொருட்கள் கடை என சிலக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அரசு. ஆனால், முடித்திருத்தகம், அழகு நிலையங்கள் ஆகியவற்றிற்கு மட்டும் அனுமதியளிக்காமல் அரசு தடையை நீட்டித்துள்ளது.
பெரும்பாலும் வசதியற்ற, சுயமுன்னேற்ற எண்ணம் கொண்ட பெண்களாலும், திருநங்கைகளாலும் நடத்தப்பட்டு வரும் அழகு நிலையங்கள், தொடர்ந்து பூட்டியே கிடப்பதால், இனிமேலும் இத்தொழிலில் நிலைக்க முடியுமா என்ற அச்சத்தை அவர்களுக்கு விதைத்துள்ளது. ஏனெனில், பெரும்பாலும் வங்கி, சுய உதவிக் குழுக்களில் பெற்றக் கடன் மூலமே இவற்றை அப்பெண்கள் நடத்தி வருகின்றனர். ஒரு மாதத்திற்கும் மேலாக கடை மூடப்பட்டிருப்பதாலும், கரோனா அச்சம் மக்களிடையே மிகுந்துள்ளதாலும், அடுத்தடுத்த மாதங்களில் இத்தொழிலின் வரவேற்பு நிலையை எண்ணி கவலையில் உள்ளனர், அழகு நிலையம் நடத்தும் பெண்கள்.
அழகு நிலையங்கள் இயங்க ஒருவேளை நாளையே அனுமதி அளிக்கப்பட்டாலும், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றுவதற்கு கூட பொருளாதாரமின்றி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் இவர்கள். முகக்கவசம், கையுறைகள், டிஷ்யூ பேப்பர், சானிடைசர் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கே பெரும் தொகை தேவைப்படும் என்பதால், தமிழ்நாடு அரசு நல்லதொரு தீர்வை தங்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கோருகின்றனர்.
மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பார்லர்கள் செயல்படும் நிலையில், பல தனியார் நிறுவனங்களின் பார்லர்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த பார்லர்களில் பியூட்டிஷியன், மேக்கப் ஆர்டிஸ்ட், சலூன் தெரபிஸ்ட், ஃபிரீலன்சர் என பல்லாயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ஊரடங்கால் இவர்கள் அனைவரும் வேலை, வருமானமின்றி முடங்கிக் கிடக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், வழக்கமாக கிடைக்கும் மணப்பெண் அலங்காரப் பணி கிடைப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கான வேலைவாய்ப்பினை தாங்களே ஏற்படுத்திக்கொண்டு சொந்தக்காலில் நிற்கும் இதுபோன்ற பெண்களுக்கு இடர் வரும் இதுபோன்ற நேரங்களில், அரசு உதவ வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: ’திருத்துநர்களுக்கு பயிற்சி அளித்து முடி திருத்தகங்களை திறக்கலாம்’ - சுகாதாரத் துறை முன்னாள் இயக்குநர்