ஆவடி, காந்திநகர், நாகவல்லி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி காந்தம்மாள் (57). இவர், ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும், காந்தம்மாள் தனது பேரன் விஜயகுமாருடன் சேர்ந்து, தினமும் காலையில் வீடு, வீடாக சென்று ஆவின் பால் விற்பனை செய்துவருகிறார்.
இந்நிலையில் காந்தம்மாள், வாடிக்கையாளர்களிடம் சென்று பால் பணத்தை வசூல் செய்துள்ளார். பின்னர், வசூலான ரூ.95 ஆயிரம் ரொக்கப்பணம், செல்போன் ஆகியவற்றை சாப்பாட்டு பையில் வைத்துக்கொண்டு வங்கிக்கு வேலைக்கு வந்துவிட்டார்.
பின்னர், பணத்துடன் கூடிய பையை வங்கியில் உள்ள சாப்பாட்டு அறையில் வைத்துள்ளார். இதன் பிறகு, காந்தம்மாள் சாப்பாட்டு அறைக்கு வந்து பையை பார்த்தபோது, அங்கிருந்து பை மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வங்கி முழுவதும் பணத்துடன் கூடிய சாப்பாட்டு பையை தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து, அவர் வங்கி அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தார். மேலும், காந்தம்மாள் ஆவடி காவல் நிலையத்தில் புகாரும் செய்தார். அதனடிப்படையில் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து சிசிடிவியை ஆரயாந்தபோது, பணத்துடன் சென்ற காந்தம்மாளை அடையாளம் தெரியாத நபர் பின்தொடர்ந்து வங்கிக்குள் சென்றுள்ளார். பின்னர், அவர் சாப்பாட்டு அறையில் வைத்திருந்த பையை வெளியேறியுள்ளார். அதன் பிறகு, அந்த பையை அருகிலுள்ள விஜயா வங்கியில் வைத்துவிட்டு பணத்தை மட்டும் அவர் திருடி சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் இரு வங்கிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து பணத்தை திருடியவரை மர்ம நபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.