தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக, குட்கா தொழிற்சாலை உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில் முருகன், மத்திய கலால்துறை அலுவலர் என்.கே. பாண்டியன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு முறை உயர் நீதிமன்றமும், மூன்று முறை சிபிஐ நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுத்து வந்த நிலையில் கடந்த வாரம் செந்தில் முருகன், என்.கே.பாண்டியன், சிவக்குமார் ஆகியோருக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு, மாதவ ராவ், சீனிவாச ராவ், உமா சங்கர் குப்தா ஆகியோர் சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று பேரும் தலா ரூ.2 லட்சத்தை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.