சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளரான பொன்ராஜ் ஏப். 3ஆம் தேதி இரவு மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது வேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி முயன்றபோது, ஆட்டோ இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் பொன்ராஜூக்கு கை, கழுத்து மற்றும் தலை பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனிடையே இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து நந்தம்பாக்கம் போலீசார் மற்றும் மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
தானாக சிக்கிய ஆட்டோ ஓட்டுநர்: இதனிடையே பொன்ராஜ் மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது. அப்போது ஒருவர் சிகிச்சைக்காக நிதி உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொன்ராஜ், நந்தம்பாக்கம் போலீசாருக்கும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
அந்த செல்போன் எண் குறித்து போலீசார் விசாரிக்கையில், செல்போன் உரிமையாளருக்கும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கும் தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுதர்சனம் என்ற ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சுதர்சனம் அளிக்க வாக்குமூலத்தில், "நான் புற்றுநோயால் அவதிபட்டுவருகிறேன். சம்பவத்தின்போது ஆட்டோ கட்டுப்பாட்டில் இல்லாமல் சென்றதால் விபத்து ஏற்பட்டது. போலீஸ் மீது மோதியதால் பயத்தில் ஓடி விட்டேன்" என்றார்.
உதவி ஆய்வாளரைச் சந்தித்த சைலேந்திர பாபு: இதனிடையே பொன்ராஜை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு இன்று சந்தித்தார். உடல் நலம் விசாரித்து விசாரித்தார். அத்துடன் தேவையான அனைத்து மருத்துவ உதவியையும் வழங்குவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆட்டோ மோதி உதவி ஆய்வாளர் படுகாயம்: பதைபதைக்கும் சிசிடிவி காட்சி