சென்னை: புறநகர்ப்பகுதியைச் சார்ந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக பள்ளிக்குச்செல்ல விரும்பாமல் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம்போல, மாணவி வீட்டிற்கு வந்து வீட்டில் சண்டை இட்டுவிட்டு, வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.
அப்போது அந்த வழியே வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அந்தச்சிறுமியை வலுக்கட்டாயமாகத் தனது ஆட்டோவில் தூக்கிச் சென்று, ஒரு வாட்டர் கம்பெனி பின்புறம் உள்ள முட்புதரில் வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அவனிடமிருந்து அலறியபடி தப்பித்து ஒடிவந்துள்ளர். இதனைக்கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், மாணவியை மீட்டு அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி நடந்தவற்றை காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்குப்பதியாத நாட்களே இல்லை எனவும் சிறுமிகளிடையே பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தாததால் சிறுமியர்கள் மீதான பாலியல் சீண்டல் அதிகரித்து, போக்சோ வழக்குகள் அதிகரிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாடியுள்ளனர்.
இதையும் படிங்க: ஒருதலை காதலால் விபரீதம்...16 வயது சிறுமியின் கழுத்தை அறுத்த இளைஞன்