காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசன நிகழ்வு ஜூலை 1ஆம் தேதியிலிருந்து நடைபெற்றுவருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்துவருகின்ற நிலையில், போதுமான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அதனால், துணை ராணுவப்படை பாதுகாப்பை பக்தர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ”அத்திவரதரை அதிகபட்சமாக கடந்த 18ஆம் தேதி 2.75 லட்சம் பேர் தரிசனம் செய்தனர். ஜூலை 1ஆம் தேதியில் இருந்து தற்போது வரை 34 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைன் மூலமாக தினமும் 500 பேர் 300 ரூபாய் கட்டணத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் செல்ல தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக முக்கியமான ஏழு இடங்களில் 200 கழிப்பறைகள் வரை தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளன. தினமும் 1 லட்சம் பேருக்கு குடிதண்ணீர் வழங்கும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட ஆரோ வாட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவசர தேவைக்கு 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 5 இருசக்கர வாகன ஆம்புலன்ஸ் வசதியும் சிறப்பு மருத்துவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு முகாமில் குறைந்தபட்சமாக 32,000 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிக்கு 2 ஐ.ஜி தலைமையில், 14 எஸ்.பி, 57 டி.எஸ்.பி, 171 ஆய்வாளர்கள் உட்பட 5,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 7 தீயணைப்புத் துறை வாகனங்கள் மற்றும் 250 தீயணைப்பு வீரர்களும் தொடர் கண்காணிப்புப் பணியில் உள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 9,000 பேர் என சராசரியாக 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்கின்றனர்.
தரிசனத்தின்போது 4 பேர் உயிரிழந்ததற்கு வயது முதிர்வு மற்றும் நீர்சத்து குறைபாடே காரணம். கூட்ட நெரிசலை ஒரு காரணமாக கூற முடியாது. மேலும், ஆடி பூரம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட மூலவர் சன்னிதானத்தை தரிசிக்க பக்தர்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, ”உயிரிழப்புக்கு போதுமான வசதிகள் இல்லாததே காரணம், ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வர வழிகள் இல்லை. அதனால் அவசர காலங்களில் உடனடி நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்புக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பாதுகாப்பு குறைபாடு என்றால் 2.75 லட்சம் பேர் எப்படி ஒரே நாளில் தரிசனம் செய்தனர்? முக்கியத்துவம் இல்லாத பணிகளுக்கு துணை ராணுவம், சி.ஐ.எஸ்.எப் போன்றவற்றை ஈடுபடுத்த உத்தரவிட முடியாது என தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.