சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழம் வழங்கும் தகுதிச்சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதன் துணைவேந்தர் சுதா சேஷையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தில் படிக்காமல் வேறு பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு தகுதிச்சான்றிதழ் வாங்க வேண்டும்.
அதேபோல், முதுகலை மற்றும் சிறப்பு பட்டப்படிப்புகளில் சேர்வதற்கும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக் கழகத்தின் இளநிலைப் பட்டம் பெறாதவர்கள், தகுதிச்சான்றிதழ் பெற வேண்டும். இந்த தகுதிச்சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தைக்குறைக்க வேண்டும் எனவும், அதற்கான வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வந்தது.
அதனைத் தொடர்ந்து தகுதிச்சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் எளிதாக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷையன் இன்று (செப்.13) வெளியிட்ட அறிவிப்பில், 'தகுதிச் சான்றுக்கான கட்டணங்கள் ஒருமைப்படுத்தப்படுவதாலும், மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறைகள் எளிமையாக்கப்படுவதாலும், தொழில் நுட்ப மாற்றங்களை பல்கலைக்கழகம் செய்து வருகிறது.
சீராய்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதால் தகுதிச்சான்றிதழுக்கான தொழில்நுட்ப நுழைவுகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. தகுதிச்சான்று தேவைப்படும் மாணவர்கள் வரும் செப்.15ஆம் தேதிக்குப் பின் விண்ணப்பிக்கலாம்.
யாரும் பதைபதைக்க வேண்டாம், எல்லோருடைய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். இந்த நிறுத்தம் தற்காலிகமானது மட்டுமே' எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: யாருக்காக ஷிண்டே வருகிறார்? யாரை மிரட்டுகிறார்கள்? - பாஜக அண்ணாமலைக்கு எதிராக சீறிப்பாய்ந்த கேசிஆர்!