சென்னை: திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் செல்வக்குமரன் என்பவர் சார்பதிவாளராகப் பணியாற்றிவந்தார். 2018ஆம் ஆண்டுமுதல் 2019ஆம் ஆண்டுவரை பணியாற்றிவந்த அவர் 2020 ஜனவரி மாதம் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்ததையடுத்து பத்திரப் பதிவுத் துறை தலைமை அலுவலகத்தின் மூலம் பணியிடை நீக்கம்செய்யப்பட்டார்.
குறிப்பாக தீனதயாள் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலத்தைப் பதிவுசெய்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கிடைக்கப்பெற்ற புகாரில் பணியிடை நீக்கம்செய்யப்பட்டார்.
வழக்குப் பதிவு
இந்த விவகாரத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் பணியிடை நீக்கம்செய்யப்பட்ட சார்பதிவாளர் செல்வக்குமரன், முறைகேட்டில் ஈடுபட்ட தீனதயாள் அறக்கட்டளை நிர்வாகிகள் டி.டி. நாயுடு, அவரது மகன் டாட்டாஜி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
உறவினர்களுக்கு இடையே சொத்துகளை மாற்றும்போது அதற்கு உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென பத்திரப் பதிவுத் துறை விதிமுறை உள்ளது.
ஆனால் அதை மறைத்து டி.டி. நாயுடு, தனது அறக்கட்டளையான தீனதயாள் கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளையிலிருந்து அவரது மகன் டாட்டா ஜி நிர்வாகிக்கும், டி.டி. நாயுடு மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளை என்ற மற்றொரு அறக்கட்டளைக்கும் மாற்றப்பட்டது போன்று பத்திரப்பதிவு செய்து மோசடி செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிபிஐ விசாரணை
மேலும், இந்த நிலங்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் சுமார் 115 கோடி வங்கிக் கடன் மோசடி செய்ததாக தீனதயாள் அறக்கட்டளை நிர்வாகி டி.டி. நாயுடு பெயரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.
அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து 104 கோடி ரூபாய் அளவில் சொத்துகளை முடக்கியுள்ளது. அவ்வாறு முடக்கப்பட்ட சொத்துகளில் ஒன்றை முறைகேடாகப் பதிவுசெய்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
செல்வக்குமரன் பணிக்காலத்தில் இதுபோன்று முறைகேடாக எவ்வளவு பத்திரப் பதிவு செய்யப்பட்டது என்றும், டி.டி. நாயுடுவின் மற்ற சொத்துகள் ஏதேனும் முறைகேடாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது