சென்னை: தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தை பின்பற்றும் மாணவர்களுக்கான ஆண்டு நாட்காட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி இன்று வெளியிட்டார். அதன்படி, 2021-22 ஆம் கல்வியாண்டில் கோடை விடுமுறை முடிந்து, 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் வரும் ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
வரும் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதியும் துவங்கி நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஒன்று முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வரக்கூடிய கல்வியாண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் துவங்கி நடைபெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு செப்டம்பர் 26-ஆம் தேதி காலாண்டு தேர்வு துவக்கப்பட்டு 30 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. தேர்வு முடிந்தப் பின்னர், அக்டோபர் 6ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதே போன்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு டிசம்பர் 19ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் துவக்கப்படும் என்றும், 11 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 16ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என்றும் அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 20 ஆம் தேதி துவங்கி 28 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 2022-23 ஆம் கல்வியாண்டின் கோடை விடுமுறை ஏப்ரல் 30 ஆம் தேதி துவங்கி மே 30 ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இந்தக் கல்வியாண்டில் 210 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் கோடை விடுமுறை ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் ஆரம்பம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லையா? - அதிர்ந்த ஆசிரியர்களுக்கு அமைச்சரின் பதில்!