இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரிகளில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்வித் தரத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் அரசு கல்லூரிகளுடனும், அண்ணா பல்கலைக்கழகத்துடனும் ஒப்பிட முடியாத உறுப்புக் கல்லூரிகளில் ரூ.30,000-க்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே அதிகம் எனும் நிலையில், இந்தக் கட்டணத்தையும் உயர்த்தப் போவதாக துணைவேந்தர் அறிவித்திருப்பது மிகப்பெரிய அநீதி ஆகும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள எந்த பல்கலைக்கழகமும் உறுப்பு கல்லூரிகளுக்கான கட்டணத்தை உயர்த்தியதில்லை. அப்பல்கலைக்கழகங்களை பின்பற்றி அண்ணா பல்கலைக்கழகமும் இப்போதுள்ள கட்டணத்தையே வசூலிக்க முன்வர வேண்டும்.
உலக அளவில் ஏற்பட்டு வரும் நான்காம் தொழில் புரட்சி காரணமாக பெருமளவில் வேலையிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்கவும், நான்காம் தொழில் புரட்சியின் தேவைகளை நிறைவேற்றவும் வசதியாக புதிய பாடத்திட்டங்களையும், படிப்புகளையும் உருவாக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
அதை விடுத்து கட்டணத்தை உயர்த்துவதில் துணைவேந்தர் துடிப்பு காட்டுவது தேவையற்றது. எனவே, கல்விக்கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.