சென்னை: கடந்த 8ஆம் தேதி குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் தேவையற்ற, சர்ச்சைக்குரிய கருத்துகள் பரவிவருகின்றன.
இது குறித்து மாரிதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "திக, திமுக ஆதரவாளர்கள் கேலி செய்யும்விதமாகப் பதிவிடுகின்றனர். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை" எனப் பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை காவல் துறையினர் கைதுசெய்து பின்னர் புதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட பாஜக தலைவர் மருத்துவர் சரவணன் தலைமையில் ஏராளமானோர் புதூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனால் காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவர் சரவணன் உள்ளிட்ட பாஜகவினர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், காவல் துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது ட்விட்டர் பதிவில்,
"மதுரையில் மாரிதாஸ் காவல் துறையால் கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டறிந்து, அவரிடம் தொலைபேசி மூலமும் உரையாடினேன்! ஜனநாயகம் அளித்த கருத்துரிமையைப் பொருட்படுத்தாமல் பாரபட்சமான இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுகவை விமர்சித்தால் மட்டும் கைது? இதுதான் தமிழ்நாட்டின் தற்போதைய அவலநிலை. ஒருபக்கம் சமூக வலைதளத்தில் தன்னுடைய ஏவல் படையைத் தயார் செய்தும், இன்னொருபக்கம் தேசியவாதிகளை அறிவாலயம் அரசு கைதுசெய்கிறது! இந்த கபட நாடகத்தை தமிழ்நாடு பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு ட்வீட்டில் இவ்வாறு குறிப்பிடுகிறார் அண்ணாமலை...
- தன்னுடைய அதிகார மமதையினால் அறிவாலயம் விமர்சனம் செய்பவர்களுக்கு விலங்கு பூட்டுகிறது. திமுக அரசால் பழிவாங்கும் நோக்கில் கைதுசெய்யப்பட்ட தமிழ்நாடு பாஜக உறுப்பினர் கல்யாண் ராமன், பிற தேசியவாதிகளுக்குச் சட்டப்பூர்வ தீர்வுகளை, உதவிகளைத் தமிழ்நாடு பாஜக செய்துவருகிறது.
- சட்ட உத்தரவாத கருத்துச் சுதந்திரத்தைக் கடுமையாக மீறி பழிவாங்க மாரிதாஸ் நேற்று கைதுசெய்யப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றக் காவலில் இருந்து விடுவிக்க தமிழ்நாடு பாஜக போராடும். அனைவருக்கும் சட்டம் மற்றும் இதர உதவிகளையும் தமிழ்நாடு பாஜக முன்நின்று செய்யும்!
இதையும் படிங்க: ட்விட்டரில் ட்ரெண்டாகும் மாரிதாஸ் யார்?