சென்னை: தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கருப்புச் சட்டை அணிந்து நாளை (செப். 20) பணியாற்ற இருக்கின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தை, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் எனவும் இரண்டாக பிரிக்கும் சட்ட மசோதா அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி தற்போதுள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட இருக்கின்றது.
புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயர் வழங்கப்படவுள்ளது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து நாளை முதல் கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட நான்கு இடங்களில் செயல்படும் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.