சென்னை: இணையவழி வகுப்புகளை நடத்துவதில் சிக்கல் உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் இணைப்பு பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரையில் நடப்பு கல்வியாண்டிற்கான பருவ வகுப்புகள் இணையவழி நடைபெற்று வருகிறது. இச்சூழலில் இணையவழி வகுப்புகளில் சிக்கல் இருப்பதாக மாணவர்கள், பேராசிரியர்கள் தரப்பில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள், பேராசிரியர்களிடம் பகுப்பாய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் இணையவழி வகுப்புகளில் சிக்கல் உள்ளதை அண்ணா பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது. தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் பருவ வகுப்புகளின் போது மாணவர்களுக்கு நடத்தப்படும் அக மதிப்பீட்டிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
செய்முறை, செய்முறை அல்லாத பாடங்களுக்கு எவ்வாறு அக மதிப்பீடுகளை செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி செய்முறை / செய்முறை அல்லாத பாடங்களுக்கு இணைய வழியாக பாடம் சார்ந்த வினா-விடை போட்டிகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
அக மதிப்பீட்டிற்காக நடத்தப்படும் தேர்வுகளை மாணவர்கள் புத்தகங்களைப் பார்த்து எழுதும் முறையில் நடத்தலாம் எனவும் அதில் கூறியுள்ளது.