வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கேட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்ததையடுத்து, காலை முதலே சென்னையை நோக்கி பாமகவினர் பலர் வரத்தொடங்கினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், பெருங்களத்தூர் பகுதியில் ரயில் மீது கற்களைக் கொண்டு தாக்கியும், காவல்துறை வைத்திருந்த தடுப்புகளை தூக்கி எறிந்தும் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால் மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்க பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேரம் கேட்டிருந்ததையடுத்து நண்பகலில் அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. பின் முதலமைச்சரை சந்தித்த அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ” பாமக பொதுக்குழு கூட்ட தீர்மானப்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்ததன் அடிப்படையில் இன்று அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
20% இட ஒதுக்கீடு கோரிக்கை ஜாதி பிரச்சனையோ, யாருக்கும் எதிரான போராட்டமோ கிடையாது. இது சமூக நீதிக்கான போராட்டம். சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் வன்னியர்கள், கூலி வேலை, வீட்டு வேலை, உள்ளிட்டவற்றை செய்து வருகின்றனர். எனவே, இந்த சமூகம் வளர்ச்சி பெற்றால்தான் தமிழகம் வளர்ச்சி பெறும் என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் வைத்துள்ளோம். நல்ல முடிவு எடுப்பதாக அவர் கூறியுள்ளார் “ என்றார்.
போராட்டம் என்கிற பெயரில் பாமகவினர் வன்முறையில் ஈடுபடுவது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அன்புமணி, தாங்கள் வன்முறைக்கு எதிரானவர்கள் என்றும், அதனாலேயே அறவழியில் போராடி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’பாமகவின் நியாயமான போராட்டத்தை காவல்துறை நசுக்குகிறது’