சென்னை: அரசு, பல்கலை பேராசிரியர்களின் பதவி உயர்வை தாமதமின்றி வழங்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிவை வளர்க்கும் பணி
அதில், தமிழ்நாடு அரசு கலை - அறிவியல் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அனைத்துத் துறை பணியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் காலம் சார்ந்து பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், அறிவை வளர்க்கும் பணியைச் செய்யும் ஆசிரியர்களுக்கு மட்டும் அதை மறுப்பது நியாயமற்றதாகும்.
அரசு கலைக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அதிகபட்சமாக இணைப் பேராசிரியர் நிலை வரையிலும், பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பேராசிரியர் நிலை வரையிலும் பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன. பதவி உயர்வுக்கான தகுதிகள் இரு தரப்புக்கும் பொதுவானவை தான். முனைவர் பட்டம் பெற்று உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தவர்களுக்கு 4 ஆண்டுகள் பணி நிறைவில் ரூ.1000 தர ஊதிய உயர்வு, அடுத்த 5 ஆண்டுகள் பணி நிறைவில் மேலும் ரூ.1000 தர ஊதிய உயர்வு அடுத்த 3 ஆண்டுகள் பணி நிறைவில் இணைப்பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்படும்.
பதவி உயர்வு கிடைக்கவில்லை
எம்.பில் பட்டம் பெற்று உதவிப் பேராசிரியராக பணியில் சேருபவர்களுக்கு முதலாவது பதவி தர ஊதிய உயர்வு வழங்கப்படுவதற்கு மட்டும் ஓராண்டு கூடுதலாக 5 ஆண்டுகள் ஆகும். பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு இணைப் பேராசிரியர் நிலையில் 3 ஆண்டுகள் பணி நிறைவில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும்.
உதவிப் பேராசிரியர் பணியில் சேரும் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் அதிகபட்சமாக 13 ஆண்டுகளில் இணைப் பேராசிரியராகவும், பல்கலைக்கழகங்களில் 16 ஆண்டுகளில் பேராசிரியராகவும் பதவி உயர்வு பெறுவர். ஆனால், 5 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்கவில்லை.
2007, 2008, 2009-ஆம் ஆண்டுகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது இணைப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவர்களில் எவருக்கும் இரண்டாவது தர ஊதிய உயர்வு கூட வழங்கப்படவில்லை. அதன்பின் பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியர்களுக்கும் இதே நிலை தான். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான பொருளாதார இழப்பை எதிர்கொண்டு வருகின்றனர். பொருளாதார இழப்பு மட்டுமின்றி, கல்வி சார்ந்த இழப்புகளும், உலகளாவிய கற்றல்-கற்பித்தல் அனுபவ இழப்புகளும் அவர்களுக்கு ஏற்படுகின்றன.
உரிமைகளை இழக்க நேரிடும்
ஓர் உதவிப் பேராசிரியர் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் 4 பேருக்கு மட்டும் தான் முனைவர் பட்ட வழிகாட்டியாக இருக்க முடியும். ஆனால், இணைப் பேராசிரியராக 8 பேருக்கும், பேராசிரியராக 12 பேருக்கும் முனைவர் பட்டத்திற்கு வழிகாட்ட முடியும்.
முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரையை மதிப்பிடுதல், ஆசிரியர் பரிமாற்றத் திட்டத்தின்படி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பணியாற்றுதல், ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு குறைந்தது இணைப் பேராசிரியராக இருக்க வேண்டும் என்பதால் பதவி உயர்வு கிடைக்காததன் காரணமாக இவ்வளவு உரிமைகளையும் இழக்க நேரிடுகிறது.
கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் அத்துடன் இணைந்த தர ஊதிய உயர்வு வழங்கப்படாததற்கு நிதி நெருக்கடி தான் காரணம் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, பிற அரசுத்துறையினருக்கான பதவி உயர்வுகள் மறுக்கப்படாத நிலையில், கல்லூரி பேராசிரியர்களுக்கான பதவி உயர்வு மட்டும் காலந்தாழ்த்தப்படுவதற்கு காரணம் அதற்கான நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் தான்.
பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி
பிற அரசுத்துறையினருக்கு காலம் சார்ந்து தானாக பதவி உயர்வு வழங்கப்படும் நிலையில், அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் தங்களுக்கான பதவி உயர்வை தங்களின் செயல்பாட்டு சாதனைகளுடன் விண்ணப்பித்து அதனடிப்படையில் தான் பெற முடியும். இந்நடைமுறை பணி மேம்பாட்டுத் திட்டம் (Career Advancement Scheme) என்றழைக்கப்படுகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, பல்கலைக்கழகங்களில் பணி மேம்பாட்டுத் திட்டக்குழு 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, ஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து தீர்மானிக்கும். கல்லூரிகளைப் பொறுத்தவரை மண்டல இணை இயக்குனர் இது பற்றி முடிவெடுப்பார். ஆனாலும், கடந்த ஐந்தாண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாதது பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இது சரி செய்யப்பட வேண்டும்.
எனவே, அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய அனைத்து பதவி, தர ஊதிய உயர்வுகளையும் ஒரே தவணையில் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க:'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது' - துரைமுருகன்