இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாசித்த 104 பக்க நிதிநிலை அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் வரலாறு காணாத இறக்கம், தமிழ்நாட்டின் நிதி நிலைமையை சிக்கலான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகக் கூறுகிறார். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 7,500 கோடியை பற்றிதான் அவர் இப்படி கூறியிருக்கிறார். நடப்பு பட்ஜெட் எப்படி இருக்கிறது என்றால், தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் 57,000 ரூபாய் கடனை சுமத்தி இருக்கிறார்கள்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையோ, அறிவிப்போ இதில் எதுவும் இல்லை. அம்மா உணவகத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அம்மா உணவகம் எப்படி இயங்குகிறது என அனைவருக்கும் தெரியும். இத்திட்டத்திற்கு ஒதுக்கிய பணத்தை என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.
புதிதாக 59,000 கோடி ரூபாய் கடன் வாங்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள். தமிழ்நாடு நலனுக்காகத்தான் மத்திய அரசோடு இணக்கம் என்றால், மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி தொடர்பாக அவர்கள் மீதே ஏன் பழியை போட வேண்டும். கூவம் ஆறு திட்டத்திற்கு கடந்த ஆண்டே நிதி ஒதுக்கினார்கள். அந்தத் திட்டம் என்ன ஆனது என்று தெரியவில்லை. மீண்டும் அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இவர்கள் செயல் திட்டம் என்பது, காற்றில் வரைந்த ஒவியம் போல இருக்கிறது. நிதிச் சிக்கல் பட்ஜெட் இது என்று அவர்களே ஒத்துக்கொண்டு கைகளை தூக்கியிருக்கிறார்கள். 34,000 கோடி கல்விக்காக ஒதுக்கி இருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2020: மூலதன செலவுக்காக சுமார் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு