சென்னை: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுகந்தி நேற்று (மார்ச் 26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னை ஐஐடியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலித் மாணவி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தன்னுடன் பயிலும் மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகிய நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து, தனது பேராசிரியர் எடமன பிரசாத்திடம் புகார் செய்தபோது அவர் சாதிய வன்மத்தோடும், குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தோடும் இப்பிரச்சனையை அணுகியுள்ளார்.
2018ஆம் ஆண்டு கல்வி சுற்றுலாவிற்கு செல்லும்போது மாணவியை தனி அறையில் அடைத்து வைத்து உடலில் துணி இல்லாமல் புகைப்படம் எடுத்து அதை வைத்து மிரட்டியுள்ளனர். கிங்ஷீக்தேவ் ஷர்மா அந்த மாணவியை கல்வி வளாகத்திலும், ஆய்வு கூட்டத்திலும் 2 முறை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கல்வி வளாகத்தில் உள்ள உள்புகார் குழுவிற்கு 2020, ஜூலை 17 அன்று புகார் மனுவை அனுப்பியுள்ளார்.
3 முறை தற்கொலை முயற்சி: உள்புகார் குழு விசாரணை செய்து இடைக்கால் அறிக்கை ஒன்றை சமர்பித்தது. அதில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் கல்வி வளாகத்திற்குள் வரக் கூடாது என உத்தவிட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், அப்போது ஆன்லைன் வகுப்பு என்பதால் அவர்கள் அதில் பங்குபெற்றுள்ளனர். இதனால், மனவேதனையில் இருந்த மாணவி மூன்று முறை தற்கொலை முயற்சிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
2021 மார்ச் 29 அன்று தேசிய மகளிர் ஆணையத்திற்கும், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கும் மாணவி புகார் மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏறத்தாழ மூன்று மாதங்கள் கழித்து 2021 ஜூன் 9 அன்று மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவிந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, செளர்வ தத்தா, அய்யன் பட்டாசார்யா ஆகிய 8 பேர் மீது 354, 354(b), 354(c) 506(1) ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குற்றவாளிகளை பாதுகாக்கும் போலீசார்: ஒன்பது மாதம் ஆகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பாதிக்கப்பட்ட மாணவி தலித் என்பதால் 376ஆவது பிரிவு மற்றும் எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் இந்த வழக்கை பதிவு செய்திருக்க வேண்டும். குற்றவாளிகளை முழுக்க முழுக்க பாதுகாக்க காவல் துறை செயல்பட்டிருக்கிறது. இந்த வழக்கு காவல் துறைக்கு சென்றதால் உள்கமிட்டி விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாணவிக்கு தெரிந்த நண்பர் ஒருவர் ஜெய்பீம் திரைபடத்தை பார்த்து, அந்த மாணவியிடம் கூறியிருக்கிறார். அத்திரைப்படத்தில் வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பார். அதை பார்த்து வழக்கறிஞர் சந்துரு முகவரியை கண்டறிந்து மாணவி பேசியுள்ளார். அவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை தொடர்பு கொள்ள கூறியுள்ளார்.
இந்நிலையில், 2022 மார்ச் 22 அன்று மாணவி மகளிர் ஆணையத் தலைவரை சந்தித்து புகார் அளித்தார். மாணவியின் புகார் அடிப்படையில் ஐஐடி நிறுவனம் மற்றும் உள்புகார் குழு, ஒரு வாரத்திற்குள் விசாரணையை முழுமையாக முடித்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மெத்தனமாக செயல்பட்ட மயிலாப்பூர் காவல் நிலை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.