சென்னை: ஆவடி விமான படை தளத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை பகுதியில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு வீரர்களுக்கு டெக்னீசியன் மற்றும் சட்டம் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இங்கு ஆண்டுக்கு இரு முறைப் பயிற்சி முடித்த வீரர்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் பாதுகாப்புப்பணிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இங்கு குஜராத் மாநிலம், கொடிநூர் மாவட்டத்தைச்சேர்ந்த நீரோவ் சௌஹான்(22) என்ற வீரர், Assistant air craft man பதவியில் கடந்த ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பாதுகாப்புப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று(செப்.14) நீரோவ் செளஹான் ஆவடி இந்திய விமானப்படை அலுவலகத்தின் முன் பகுதியில் AK47 ரக துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். மாலை சுமார் 4மணி அளவில் இவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் கழுத்தில் சுட்டுக்கொண்டுள்ளார். இதில் அவரின் கழுத்தில் 3 தோட்டாக்கள் பாய்ந்ததில் நீரோவ் செளஹான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் தகவலின்பெயரில் விமானப்படை அலுவலர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விமானப்படை அலுவலர்கள் முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுப்பேட்டை காவல்துறை அலுவலர்கள் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வு சோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகார் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விமானப்படை வீரர் நீரோவ் சௌஹான் தற்கொலைக்கு குடும்பப் பிரச்னையா அல்லது பணியில் ஏற்பட்ட மன அழுத்தத்தமா என பல கோணங்களில் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடியில் மத்திய ராணுவத்திற்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்கள் இயங்கிவரும் நிலையில் வீரர்களுக்கு உயர் அலுவலர்கள் தொடர் அழுத்தம் கொடுப்பதால் அவ்வப்போது வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகியுள்ளது.
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர் சக வீரரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக்கூறி கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்!