தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் பிப்ரவரி 24 முதல் மார்ச் 5ஆம் தேதி வரை விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 24ஆம் தேதி அதிமுகவில் விருப்பமனு வழங்கலாம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளார்கள்.
அதன்படி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் ரூ. 15 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுவைப் பெறலாம். அதேபோல, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் ஐந்தாயிரம் ரூபாயும், கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் இரண்டாயிரம் ரூபாய் கட்டணத்தொகையாகச் செலுத்தியும் விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகப் பூர்த்திசெய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.