சென்னை: அஇஅதிமுகவில் நிர்வாகிகளைத் தேர்வுசெய்வதவற்கான உள்கட்சித் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கான தேர்தல் அட்டவணையை அக்கட்சி இன்று (டிசம்பர் 2) வெளியிட்டுள்ளது.
டிச.8இல் தேர்தல் முடிவு
அதன்படி, நாளை (டிசம்பர் 3), நாளை மறுதினம் (டிசம்பர் 4) வேட்புமனு தாக்கல்செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 5ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை என்றும், டிசம்பர் 6ஆம் தேதிவரை வேட்புமனுவைத் திரும்பப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தேர்தல் வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு
மறைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதா, கழகம் எனக்குப் பின்னாளும் 100 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து இருக்கும் என்று சூளுரைத்தார். அவர் வகித்த பொதுச்செயலாளர் பொறுப்பு அவர்களுக்கு மட்டுமே உரியது என அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின், அதிமுகவை வழிநடத்த 2017 செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உருவாக்கப்பட்டு, பொதுச்செயலாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொறுப்புகளும், அதிகாரங்களும், இவர்களுக்கு அளித்து முழுமையாக இணைந்து செயல்பட பொதுக்குழு ஒப்புதல் வழங்கியிருந்தது.
இதையும் படிங்க: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு விதியில் மாற்றம் - செயற்குழு கூட்டத்தில் முடிவு