சென்னை: சசிகலாவை ஓரங்கட்டி, இரு கட்சிகள் இணைப்பு பாஜகவால் மட்டுமே சாத்தியம் என்பதையும் துக்ளக் பத்திரிகை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது.
2017ஆம் ஆண்டு சசிகலாவை கட்டம் கட்டி இபிஎஸ் அவர்களை பதவியேற்க வைத்து ஓபிஎஸ்- இபிஎஸ் இணைப்பை இதே பாஜக தான் அன்றைக்கு நிகழ்த்தியது என்ற கருத்து பரவலாக உள்ளது.
தற்போதைய சூழலில் தென்தமிழ்நாட்டில் அமமுகவிற்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. தனித்து நின்றாலோ அல்லது கமல் உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலோ 40 தொகுதிகள் வரை இழப்பை சந்திக்க வேண்டிவரும் எனவும் கூறப்படுகிறது. கட்சிகள் இணைந்தால் யானை பலத்தோடு, தேர்தலை தெம்போடு எதிர்கொள்ளலாம் என்பது பாஜகவின் தேர்தல் கணக்காக உள்ளது.
குருமூர்த்தியின் வார்த்தைகள் அவரது நிஜமான தரத்தை காட்டுகிறது - டிடிவி தினகரன்
இது குறித்து பேசிய, பாஜக தேசிய தொடர்பாளர் நாராயணன், “துக்ளக் பத்திரிகை சுதந்திரமானது. இது குறித்து கருத்து தெரிவிக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. இது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை. அவர்கள் தான் இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்க வேண்டும். ஊகங்களுக்கு கருத்து கூற விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர் சரஸ்வதி பேசும்போது, “சசிகலா இல்லாத அமமுகவை எங்களால் நினைத்து கூட பார்க்க முடியாது. அவரது தலைமையில் தான் கட்சி இயங்கும். அவர் வெளியில் வந்து எடுக்கும் முடிவுக்கு கட்சி தொண்டர்கள் கட்டுப்படுவார்கள்” எனக் கூறுகிறார்.
ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகும் சசிகலா எடுக்க போகும் முடிவை அதிமுகவினர் மட்டும் அல்லாது பாஜகவினரும், பிற அரசியல் நோக்கர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஆட்டம் இனிதான் சூடு பிடிக்கப் போகுது..