சீனாவும் கரோனாவும்
உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனா பெருந்தொற்றின் தொடக்கப்புள்ளியாக சீனா கருதப்படுகிறது. அந்நாட்டின் வூஹான் நகரில் உள்ள இறைச்சிச் சந்தையிலிருந்துதான் கோவிட் - 19 வைரஸ் பரவியதாக பரவலான கருத்து நிலவி வருகிறது. இதை முறையாகக் கையாளாமல் மூடி மறைக்க முயன்றதன் விளைவாகவே இந்த பெருந்தொற்று உலகளவில் பரவக் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கி பல்வேறு உலகத் தலைவர்களும், சீனாவை நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதக் காலத்தில் இந்தியாவிலும் கரோனா பாதிப்பு அதி தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் அது மெல்லத் தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது நோய்த் தீவிரம் அதிகமுள்ள சென்னை போன்ற பெருநகர்களில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சீண்டிய சீனா
கரோனாவின் தாக்கம் இந்தியாவில் தீவிரமடையத் தொடங்கினால், இந்திய அரசு இந்த விவகாரத்தில் மற்ற உலக நாடுகளைப்போல சீனா மீது எந்த பழியும் சுமத்தவில்லை. இந்தச் சூழலில்தான், இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் சீனா திடீரென்று ராணுவத்தைக் குவிக்கத் தொடங்கியது. பதிலுக்கு இந்தியாவும் ராணுவ வீரர்களை அங்கு குவித்த நிலையில், அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனி என்ற வீரரும் ஒருவர்.
சீனாவின் இந்த நடவடிக்கை நாட்டு மக்கள் மனதில் பெரும் சீற்றத்தை உருவாக்கியுள்ளது. நாடு பெருந்தொற்றை எதிர்கொண்டு போராடிவரும் நிலையில், இதுபோன்ற சீண்டலைச் சீனா மேற்கொண்டது, அந்நாட்டின் மீது வெறுப்புணர்வை, நம் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. பலரும் இனி சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். ஒரு சிலர், உணர்வின் உச்சத்திற்குச் சென்று தங்களிடம் உள்ள சீனப் பொருட்களை உடைத்து நொறுக்கினர்.
தலைநகர் சென்னையின் மனநிலை என்ன?
கடந்த வருடம் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இந்தியாவுக்கு வருகை மேற்கொண்டார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பை அளித்த பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமல்லபுரத்திற்கு அழைத்து விருந்தளித்தார். சீன அதிபருக்கு இத்தகைய சிறப்பான உபசரிப்பை மேற்கொண்ட தமிழ்நாடு, தற்போது அதே சீனப் படையின் தாக்குதலால் ஒரு வீரரை இழந்துள்ளது.
இதன் விளைவாக, தமிழ்நாட்டில் பல வணிகர்கள் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கப்போவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக தலைநகர் சென்னையின் மிக முக்கியமான இடங்களான ரிச்சி ஸ்ட்ரீட், எலக்ட்ரானிக் பொருள்கள் விற்பனைக்குப் பெயர் போனது. அங்கு விற்பனையாகும் பொருள்களில் 90 சதவிகிதம் சீன தயாரிப்பாக உள்ள நிலையில் மக்களின் மனநிலை மாற்றம் காரணமாக, வியாபாரத்தில் மாற்றம் நிகழத் தொடங்கியுள்ளது. எல்லை மோதலுக்குப் பின் வாடிக்கையாளர்கள் பலரும், தற்போது சீனத்தயாரிப்பு அல்லாத பொருட்களையே கேட்பதாக வியாபாரி ஒருவர் கூறுகிறார்.
மற்றொரு முக்கிய வியாபாரத் தலமான பர்மா பஜாரிலும் சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்பு வலுப்பதாகவும் மக்கள் சீனப் பொருட்களைப் புறக்கணிக்கத் தயாராகி விட்டதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அடையாளம் மாறும் சீன உணவகங்கள்
மக்களுக்குப் பெரிதும் பிடித்த சைனீஸ் உணவகங்களில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அனைத்தும் சீனாவில் இருந்துதான் வருகிறது. சென்னையில் ஏராளமான சைனீஸ் உணவகங்கள் உள்ள நிலையில், சீனா மீதான வெறுப்புணர்வு அதிகரித்ததன் விளைவாக சைனீஸ் உணவு விற்பனையும் தற்போது பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளது.
இது குறித்து சென்னை ஹோட்டல்கள் சங்க நிர்வாகி ரவி கூறுகையில், "கரோனா தொற்றைத் தொடர்ந்தே சைனீஸ் ஹோட்டல்களில் கூட்டம் வருவது நின்று விட்டது. தற்போது சீனாவால் நம் வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அதிக வெறுப்பு கொண்டுள்ளனர் என்பது வெளிப்படையாகத் தற்போது தெரிகிறது. இதனால், சீனப் பெயர்களில் செயல்பட்ட உணவகங்கள் ஹாங்காங், தாய் புட் என்றெல்லாம் தங்கள் பெயரை மாற்றி தங்களது சீன அடையாளத்தை மறைக்கத் தொடங்கியுள்ளன.
மேலும், சீன மொபைல் போன்கள் விற்பனை இந்தியாவில் பெரும்பங்கு வகிக்கிறது. அதற்கு மாற்றாக வேறு மொபைல் போன்கள் கிடைத்தவுடன், உடனடியாக மாற்றும் மனநிலை மக்கள் மத்தியில் வந்துள்ளது. தற்போது ஒரு புதிய மொபைல் வாங்க வேண்டும் என்றால் நிச்சயமாக நானே சீன நிறுவனத்தின் மொபைலை வாங்கப்போவதில்லை" என்கிறார்.
கரோனா மூலமாக உலகுக்கே மறைமுக தலைவலியைத் தந்த சீனா, எல்லை விவகாரத்தில் நேரடியாக நமது தலையிலேயே கைவைக்கத் தொடங்கியதன் விளைவு, பொது மக்கள் மத்தியிலும் சீனா மற்றும் அதன் தயாரிப்புகள் குறித்த வெறுப்புணர்வை உருவாக்கியுள்ளது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.
இதையும் படிங்க: மீண்டும் கல்வானுக்குத் திரும்பிய சீனப் படை!