நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஓரடியம்புலம் கிராமத்தைச் சேர்ந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இந்நிலையில், இன்று அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அமைச்சரின் மனைவி மரணம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், "நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம்.
பாசமிகு மனைவியை இழந்துவாடும் அன்பு சகோதரர் ஓ.எஸ். மணியன், அவரது குடும்பத்தினருக்கு இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும், கலைச்செல்வி ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குற்றவாளிகளுக்கு பிணை மறுப்பு!