அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் பெயர் மற்றும் வழிகாட்டுதல் குழு அறிவிப்பு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி பெயரை ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களாக திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகிய 11 பேரை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ”மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் அவைத்தலைவர் மதுசூதனன், உடல் நலமில்லாமல் சிகிச்சையில் இருப்பதால் கலந்து கொள்ள இயலவில்லை. இருப்பினும் அவரின் முழு ஒப்புதலோடு இந்நிகழ்வு நடைபெறுகிறது “ என்று கூறினார்.
அவர் அவ்வாறு கூறிய பத்து நிமிடங்களில் அவைத்தலைவர் மதுசூதனன் அங்கு திடீரென வந்தார். நடக்கவே முடியாமல் கைத்தாங்கலாக வந்த அவரைப் பார்த்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அவரை கையை பிடித்து அழைத்து பொன்னாடை அணிவித்தனர். பின்னர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்ற ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்டோருடன் மதுசூதனனும் சென்று மரியாதை செலுத்தினார்.
கடந்த சில நாட்களாகவே உடல் நலமில்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வந்த மதுசூதனன் இருந்து வரும் அவைத்தலைவர் பதவிக்கு, வேறு ஒருவரை இன்றைய கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதையடுத்து உடனடியாக ஊடகங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மதுசூதனன், “ அவைத்தலைவர் பதவியை எனக்கு ஜெயலலிதா கொடுத்தார். இதை யாரும் பறிக்க முடியாது. கடைசி வரை நான்தான் அதிமுக அவைத்தலைவர் “ என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்தே உடல்நிலை சரியில்லாத நேரத்திலும், கட்சி நிகழ்வில் அவர் இன்று கலந்துகொண்டார் என தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் - ஓபிஎஸ் மகிழ்ச்சி!