மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும் என்ற கோாிக்கையை மத்திய அரசு முன் வைத்துள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளுக்கும் இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அதிமுக சார்பில் சட்டத்துறை அமைச்சா் சி.வி. சண்முகம் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்தாா். டெல்லி சென்ற அமைச்சா் சண்முகத்தை எம்.பி ரவீந்திரநாத் நேரில் சந்தித்து பேசினாா். பின்னர் கூட்டத்தில் பங்கேற்க சென்ற சி.வி. சண்முகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கட்சியில் தலைமை பொறுப்பில் இருக்கும் ஓபிஎஸ், இபிஎஸ் போன்ற தலைவர்கள் மட்டுமே அனுமதிக்க முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனராம். இதனால் அமைச்சர் சி.வி. சண்முகம் உடனடியாக சென்னை திரும்பினார்.
கூட்டத்தில் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று பிரதமர் அலுவலகம் கடிதம் அனுப்பியிருந்த நிலையில், அதை முதலமைச்சர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அலுவலர்களின் அலட்சியம் தான் இந்த குளறுபடிக்கு காரணம், அந்த பொறுப்பற்ற அலுவலர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இக்கூட்டத்தில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், பீகாா் முதலமைச்சர் நிதீஷ் குமாா், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, சீதாராம் யெச்சூரி, மெஹபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்றனர்.