மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசுத் திட்டங்களை தொடங்கிவைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசு விழாவில் கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ''சாகர் மாலா திட்டம் மூலம் 2.25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலைக்காக 57 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலையில் 7,700 கோடி ரூபாய் செலவில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
திமுக தலைவர் அடிக்கடி மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி செய்துவருகிறது என்று கூறிவருகிறார். நான் கேள்வி கேட்கிறேன் 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்து என்ன செய்தீர்கள்? நாங்கள் பட்டியலை வெளியிடத் தயார்... நீங்கள் தயாரா?
2013 - 14 ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மன்மோகன் சிங் அரசு தமிழ்நாட்டிற்கு 16,155 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஆனால் கடந்த நிதி ஆண்டில் பாஜக அரசு 32,750 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது'' என்றார்.
முன்னதாக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "நடந்தாய் வாழி காவிரி திட்டம், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசு திட்டங்களுக்கு, மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளிக்க வேண்டும். அதிமுக - பாஜக இடையிலான வெற்றிக் கூட்டணி, வரும் தேர்தலிலும் தொடரும்'' என்றார்.
முதலமைச்சருக்கு முன்னதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், ''வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், வருங்காலத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்'' என்றார்.
இதையும் படிங்க: 'வாரிசு அரசியலை ஒழிப்போம்' - அமித் ஷா!