கடந்த 2 ஆம் தேதி கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுகவை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்டாலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கிருந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அப்பெண்ணை காவல்துறையினர் அழைத்து சென்றனர். அன்று மாலையே திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை டிஜிபி அலுவலகத்தில் இது தொடர்பாக புகார் தெரிவித்ததுடன், இனியும் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் முதலமைச்சர் செல்லும் இடமெங்கும் திமுகவினர் அவரை மறித்து கேள்வி எழுப்புவார்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இன்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளரான பாபு முருகவேல் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ”ஒரு பெண்ணின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி தொண்டர்களை ஏவி கொலைவெறி தாக்குதல் நடத்தி ஸ்டாலின் அப்பெண்ணை வெளியேற்றியுள்ளார். மேலும் அப்பெண் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர் வேலுமணியின் தூண்டுதலின் பேரிலேயே வந்ததாகவும், திமுக நினைத்தால் முதலமைச்சர் எங்குமே கூட்டம் நடத்த முடியாது என மிரட்டும் தொனியிலும் ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஏற்கெனவே முதலமைச்சர் பற்றியும், தமிழ்நாட்டின் இறையாண்மையை கெடுக்கும் வகையிலும் ஸ்டாலின் பேசக்கூடாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள போதும், அதனை அவமதிக்கும் வகையில் அவர் மீண்டும் நடந்துகொண்டுள்ளார். இதோடு, ஸ்டாலின் தனது கட்சி தொண்டர்களை வன்முறைக்கு தூண்டவும் வாய்ப்புள்ளது. எனவே, அவதூறு பரப்பும் வகையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குற்றம் சொல்வதும், ஏளனம் பேசுவதும் திமுகவின் வாடிக்கை: கே.சி.வீரமணி!